X

20 கோடி உறுப்பினர்களை சேர்க்க பா.ஜ.க திட்டம்

பா.ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அரியானா மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றார். அங்கு ரோஹ்தக் நகரில் பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

இன்றைக்கு உலகின் மிகப்பேரிய கட்சியாக நாம் இருக்கிறோம். நமக்கு வேறு யாருடனும் போட்டி இல்லை. நாம் நமது சாதனையையே முறியடிக்க முயற்சித்து வருகிறோம். உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கைக்கு பின்னர் நமது கட்சியில் 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது நாம் 20 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதில் போட்டி இல்லை என்றாலும், மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பா.ஜனதாவுக்கு பின்னால் இருப்பதாகவும், தங்களால் பா.ஜனதாவுக்கு ஈடாக முடியவில்லை என்றும் கூறி வருகின்றன.

நாட்டில் 1,300 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இதில் சிலரின் மகன்கள் இப்போது அரசியல் செய்துவருகிறார்கள். சில குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் அல்லது வாரிசுகள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜனதா கட்சியில் மட்டுமே சாதாரண மனிதரும் அரசியலில் உயர்ந்த இடத்தை அடைய முடியும்.

உதாரணமாக நரேந்திர மோடி, அமித்‌ஷா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இப்போது உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுக்கும் ஒரே கட்சி நமது கட்சி தான். பா.ஜ.க.வில் மட்டுமே தலைவர், கொள்கை, எண்ணம், தொண்டர்கள் என அனைத்தும் உள்ளன.

எந்த அரசியல் கட்சியிடமும் அதன் கொள்கை என்ன என்று நீங்கள் கேட்டுப்பாருங்கள், அவர்களால் அதுபற்றி 2 வார்த்தைகள் கூட சொல்ல முடியாது. அவர்களுக்கு பதவி மட்டுமே வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. நாம் காங்கிரஸ் இல்லாத தேசம் என்று சொல்லும்போது, அது காங்கிரஸ் கட்சியை மட்டும் குறிப்பது அல்ல, லஞ்சம் ஊழலற்ற தேசம், கமி‌‌ஷன் அற்ற இந்தியா என்று அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.