இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி இரவு நடக்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் அந்த போட்டி கைவிடப்பட்டது.
இதையடுத்து, இந்தூரில் நேற்று நடந்த 2 வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கினார்.
77 போட்டிகளில் (71 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள விராட் கோலி 2,663 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் கோலியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 94 (நாட்-அவுட்) ஆகும். 24 அரைசதங்கள் அடித்துள்ள விராட் கோலி 248 பவுண்டரிகளும், 73 சிக்சர்களும் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 2,633 (104 போட்டிகள்) ரன்களுடன் இரண்டாமிடத்திலும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2,436 ரன்களுடன் (83 போட்டிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.