20 ஓவர் கிரிக்கெட்டில் முன் கூட்டியே திட்டமிட வேண்டும் – தினேஷ் கார்த்திக்
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன் தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.
அதன்பின் தினேஷ் கார்த்திக் – ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது.
அவர் கூறும்போது, நான் பயிற்சி செய்த விதம் வித்தியாசமானது. நான் இன்னும் எதையும் செய்யவில்லை என்று எனக்குள் சொல்லி கொண்டேன். எனக்கு ஒரு குறிக்கோள் உள்ளது. நான் எதையாவது சாதிக்க விரும்புகிறேன். எங்களுக்கு ஒரு ஓவரில் 12 ரன் தேவைப்பட்டது.
அதனால் என்ன செய்வது என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் அமைதியாக இருந்து உங்கள் ஆட்டத்தை உணர்ந்து விளையாட வேண்டும். அதைத்தான் செய்தேன்.
20 ஓவர் கிரிக்கெட்டில் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அது இல்லையென்றால் ஷாட்டை மாற்றும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு அணி கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் போன்ற வீரர் இருக்கும்போது ஆட்டத்தை எங்கிருந்து நீங்கள் பெற முடியும். 19-வது ஓவர் வரை நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன்.
பின்னர் ஜோஸ் பட்லர் சில ஷாட்டை அடித்தார். எங்களுக்கு தேவையான தொடக்கத்தை பெறவில்லை. சாஹல் நன்றாக பந்து வீசினார். ஆனால் ஆட்டத்தை எங்கிருந்தும் எடுத்து சென்று வெற்றிபெற வைக்கும் வீரர்களை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
ஷபாஸ் அகமது ஒரு ஒல்லியான நபர். ஆனால் அவர் பந்தை நீண்ட தூரம் அடித்தார். மேலும் அவர் தெளிவான விளையாட்டு திட்டத்தை பெற்றுள்ளார். ஷபாஸ் அகமது பந்து வீச்சிலும் ஒரு பெரிய பங்களிப்பை அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு 2-வது வெற்றி (3ஆட்டம்) பெற்றது. ராஜஸ்தான் முதல் தோல்வியை (3 ஆட்டம்) சந்தித்தது.