இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது.
குசால் பெரைரா அதிகபட்சமாக 28 பந்தில் 34 ரன் (3 சிக்சர்) எடுத்தார். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
லோகேஷ் ராகுல் 32 பந்தில் 45 ரன்னும் (6 பவுண் டரி), ஷிரேயாஸ் அய்யர் 26 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 29 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி ), கேப்டன் விராட் கோலி 17 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த தொடரில் இருந்து பலத்துக்கு மேல் பலம் பெற்று திகழ்கிறது.
ரோகித் சர்மா இல்லாமல் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. இது அணிக்கு நல்ல அறிகுறியாகும்.
நவ்தீப் சைனி ஒருநாள் போட்டியில் இருந்து வந்துள்ளார். அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் இளைஞர்கள் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகவும் பவுன்ஸ் ஆகும்.
உள்ளூர் போட்டியில் பிரதீஷ் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிக்கும் ஏற்றவர்கள். உலக கோப்பை அணிக்கு அவரை எதிர்பார்க்கிறேன். அணிக்கு மீண்டும் திரும்பிய பும்ரா திறமையுடன் பந்து வீசுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் புனேயில் 10-ந்தேதி நடக்கிறது.