20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய முள்ளிப்பாடி ஏரி

தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் 306 ஏக்கர் பரப்பளவில் முள்ளிப்பாடி ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் முள்ளிப்பாடி ஊராட்சியை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஏரிக்கு காடுவெட்டி காவிரி கரையோரத்தில் உள்ள பங்களா என்ற இடத்திலிருந்து வடகரை வாய்க்காலில் கிளை வாய்க்காலாக பிரிந்து வரும் முள்ளிப்பாடி வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்தடைவது வழக்கம். ஆனால் இந்த வாய்க்கால் சரி வர தூர்வாராத காரணத்தினால் கடந்த 20 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இப்பகுதி விளை நிலங்கள் வறண்டு காணப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு முள்ளிப்பாடி வாய்க்காலை தூர்வாரி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டுமென இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், முள்ளிப்பாடி வாய்க்கால் கடந்தாண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் பல லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது. ஆனாலும் தண்ணீர் ஏரிக்கு பாதியளவு மட்டுமே வந்தடைந்தது.

இந்தநிலையில் முள்ளிப்பாடி ஊராட்சி தலைவர் செல்ல கண்ணன் மற்றும் விவசாயிகள், கிராம பொதுமக்கள் இணைந்து பொதுப்பணித்துறையின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியாக செயல்பட்டு முள்ளிப்பாடி வாய்க்காலில் அலகரை பகுதியில் உள்ள திட்டுகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் சீரமைத்தனர்.

அதன் பலனாக தற்போது முள்ளிப்பாடி வாய்க்காலில் வந்த தண்ணீர் முழுமையும் ஏரிக்கு வந்ததால் முள்ளிப்பாடி ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவான 57 கன அடியை எட்டி இந்த ஆண்டு நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பாசனத்திற்காக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு முள்ளிப்பாடி ஊராட்சி தலைவர் செல்லகண்ணன் தலைமை தாங்கினார். திருச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர், முசிறி உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் செங்கல்வராயன் ஆகியோர் மதகை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் விவசாய சங்கத்தினர், பொதுமக்களும் பாசன உதவியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் வருகிற ஆண்டு இந்த முள்ளிப்பாடி ஏரியை முழுமையாக தூர்வாரி 100 கன அடி தண்ணீர் நிரம்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools