வெங்கல் அருகே நகை உற்பத்திக்கூட ஊழியர்களை தாக்கி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், வங்கி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான விவரம் வருமாறு:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது43) தங்க நகைகளை செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர் ஆவார்.இவர் சென்னை, நெற்குன்றத்தில் தங்கியிருந்து தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க நகைகளை செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு தங்களது பணியாட்கள் மூலம் சப்ளை செய்வார்.
திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் உள்ள சுனில் என்பவரது நகைக்கடைக்கு ராமேஸ்வர்லாலின் பணியாளர்கள் தங்க நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இதை கவனித்த சுனில் மகன் கமல் கிஷோர் (வயது 31), அந்த பணியாளர்களிடம் இருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான கமல் கிஷோர், சென்னை அண்ணா நகரில் உள்ள பரோடா வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது கடைக்கு நகைகளை சப்ளை செய்ய வரும் பணியாளர்களிடம் கொள்ளையடிக்க கடந்த இரண்டு வருடங்களாக திட்டமிட்டாராம். இதற்காக பாலவேடு கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் பலமுறை திட்டமிட்டு தோல்வி அடைந்தாராம்.
இந்நிலையில், ராமேஸ்வர்லால் கடையில் வேலை செய்யும் சோகன்(வயது 23), காலுராம்(வயது30) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை காலை நகைகளை சப்ளை செய்ய நெற்குன்றத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். பூந்தமல்லி, நசரத்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட கடைகளில் நகைகளை சப்ளை செய்து விட்டு வசூல் ஆன ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தையும், 1,400 கிராம் (175 சவரன்) தங்க நகைகளையும் பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றனர்.
இதனை அறிந்த கமல் கிஷோர் தனது நண்பர்கள் மூலம் ஒரு சொகுசு வாடகை கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து தாமரைப்பாக்கம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மாகரல்- காரணி கிராமத்துக்கு இடையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து காலுராமை சரமாரியாக வெட்டினர். பின்னர், தங்க நகைகள், ரொக்கப்பணம் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோர் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், சோகனை காரில் பின்தொடர்ந்து வந்ததும், மோட்டார் சைக்கிளை வழிமறித்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக கமல் கிஷோர்(வயது31) மற்றும் இவரது நண்பர்கள் பாலவீர் பகுதியில் வசித்து வரும் தமிழ்மணி(வயது28), பாலாஜி(வயது29), சுகுமார்(வயது26), கிளிடாஸ்(வயது30) ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 820 கிராம் தங்க நகைகளையும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் கிடைத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.