X

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. 30 வீரர்களைக் கொண்டு 6 அணிகளாக இந்த போட்டியில் இந்தியா களமிறக்குகிறது. இந்தியாவிலேயே சென்னையில்தான் 26 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர். செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதன் காரணமாக சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று தமது சென்னை வருகை தருவது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்த சிறப்பான போட்டி இந்தியாவில், அதுவும் செஸ் விளையாட்டுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கு மிகப்பெரிய பெருமை ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். நாளை சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் 69 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் அவர் வழங்குகிறார்.