சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 15 இடங்களில் மிக கனமழையும், 34 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தென்காசி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை 28-ந்தேதி வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
29-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும். 30-ந் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 29-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கனமுதல் மிக கனமழை பெய்யும். மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பான 30 செ.மீ. அளவைவிட 60 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 74 சதவீதம் அதிகமாகும்.
சென்னையில் இயல்பான மழை அளவு 60 செ.மீ. ஆகும். தற்போதுவரை 106 செ.மீ. மழை பெய்துள்ளது. 46 செ.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.