2 சிறுநீரகமும் செயலிழந்த சிறுமிக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ராஜ நந்தினி. இந்த தம்பதிக்கு ஜனனி (வயது 14) என்ற மகள் உள்ளார். 10-ம் வகுப்பு படித்து வரும் இவர் சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமிக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்து போவதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுமி ஜனனிக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி ஜனனிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு சிறுமியும், அவரது தாய் ராஜ நந்தினி ஆகியோரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் தாய், மகள் இருவரும் உருக்கமாக பேசியுள்ளனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்ட சிறுமியின் தாயிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்போனில் பேசி சிறுமியின் பாதிப்பு குறித்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஆடியோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஹலோ.. நான் ஸ்டாலின் பேசுறேன். குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது பற்றி சுகாதாரத்துறையிடம் பேசியுள்ளேன். தைரியமாக இருங்கள். காத்திருப்பில் உள்ளதால் வந்தவுடன் முதல் உரிமை சிறுமிக்கு கொடுக்க சொல்லி உள்ளேன். இதனால் பயப்பட வேண்டாம், என்று பேசுகிறார்.

அதற்கு சிறுமியின் தாய் ராஜ நந்தினி பதில் பேசும்போது, எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். எனது குழந்தையை காப்பாற்றினால் போதும். ஏற்கனவே நான் பட்ட கஷ்டம் போதும். நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன், என்று கண்ணீர் மல்க பேசுவதும், அதன்பிறகு முதல்-அமைச்சரிடம் எனது மகள் உங்களிடம் பேசுவதற்கு ஆவலாக இருக்கிறாள் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து சிறுமியிடம் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எல்லா சரியாகிவிடும். பயப்பட வேண்டாம். தைரியமாக இருக்க வேண்டும். கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். விரைவில் கிடைத்துவிடும். தைரியமாக இருங்கள், என்று ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools