2வது நாளில் ரூ.127 கோடி வசூலித்த டாஸ்மாக்
கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நோய் பரவலையும் கட்டுப்படுத்தவேண்டும், அதே சமயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதன் அடிப்படையில் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களை தவிர்த்து, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதன்படி, 35 நாட்களுக்கு பிறகு கடந்த 14-ந்தேதி முதல் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதும், மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் மதுபானங்களை வாங்குபவதற்காக படையெடுத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மது வகைகளை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். இதனால் இருப்பு இருந்த மதுபானங்கள் விற்று தீர்ந்தது. தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ.164.87 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்தது.
மதுப்பிரியர்கள் இடையே 2-வது நாளும் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் முதல் நாளில் இருந்த அளவுக்கு உத்வேகமும், எழுச்சியும் இல்லை. 2-வது நாளில் தமிழகத்தில் ரூ.127.09 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் ரூ.37.28 கோடி பெற்று மதுரை மண்டலம் முதல் இடத்தையும், ரூ.33.41 கோடி பெற்று சென்னை மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. சேலம் மண்டலம் ரூ.28.76 கோடி பெற்று 3-ம் இடத்திலும், திருச்சி மண்டலம் ரூ.27.64 பெற்று 4-ம் இடத்திலும் உள்ளன.
35 நாட்களுக்கு பிறகு விற்பனையை தொடங்கிய 2 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.291.96 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டுமின்றி, 2-வது நாளிலும் மதுப்பிரியர்கள் மதுக்கடைகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளனர்.