இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. முதல் டெஸ்டில் மிடில் வரிசை பலவீனமாக இருந்ததால் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டார். ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை. வருகிற 25-ந்தேதி லீட்சில் தொடங்கும் 3-வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.
இதையும் படியுங்கள்… டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை முழு விவரம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் திடீரென விலகினார். மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற ஓய்வு எடுத்து கொண்டதாக கடந்த மாதம் இறுதியில் அறிவித்தார். அதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஏற்று கொண்டது.
இதற்கிடையே பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் கூறியதாவது:-
அணிக்கு திரும்புவது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ்க்கு எந்த அழுத்தமும் இல்லை. அவர் தயாராக இருக்கிறார் என்பதை எனக்கு தெரியப்படுத்த அவர் என்னிடம் வருவார். அதுவரை காத்திருப்போம். அதற்கு கால வரம்பு எதுவும் இல்லை. பென் ஸ்டோக்ஸும், அவரது குடும்பத்தினரும் மீண்டு வருவதுதான் முக்கியம். அவர் மீண்டும் அணிக்கு வரும்போது வலுவாக திரும்புவார். இங்கிலாந்துக்காக அவர் மீண்டும் செயல்பட தயாராக இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.