2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி – நவம்பரில் இந்தியா வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021 முதல் 2023 வரை நடக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே வருகிற 4-ந் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான அட்டவணை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 9 அணிகளும் இந்தக்காலக்கட்டத்தில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும்.
உள்ளூர், வெளியூர் என சமமாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அணிக்கும் மாறுபட்டு இருக்கும்.
இந்திய அணி, நியூசிலாந்து(2 டெஸ்ட்), இலங்கை (3), ஆஸ்திரேலியாவுடன் (4) உள்ளூரிலும், இங்கிலாந்து (5), தென் ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம்(2) ஆகியவற்றுடன் அந்நாட்டு மண்ணிலும் விளையாடுகிறது.
இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டில் விளையாடுகிறது. இங்கிலாந்து அதிகபட்சமாக 22 போட்டிகளில் ஆடுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 18 டெஸ்டில் விளையாடுகிறது.
இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை முடித்த பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்வார்கள். அதைத்தொடர்ந்து அங்கேயே டி20 உலகக்கோப்பையும் நடைபெறுகிறது. அதன் பிறகு நாடு திரும்பியதும் அவர்கள் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள். 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி நவம்பர் மாதம் இந்தியா வருகிறது.
அதன்பிறகு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இலங்கை அணி இந்தியா வந்து 3 டெஸ்டில் விளையாடும். அதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லும்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் முறையில் மாற்றம் செய்து ஐ.சி.சி. அறிவித்து உள்ளது. அதன்படி வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும், டைக்கு 6 புள்ளியும் வழங்கப்படும். மெதுவாக பந்து வீசும் அணிக்கு ஒருபுள்ளி குறைக்கப்படும்.