X

2வது அலையை விட 3வது அலை மிக மோசமாக இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் கூடுதலாகி வருகிறது.

மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், மக்களை காக்கிற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டும் வருகிறோம். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது லேசாக பரவத்தொடங்குகிறது. இதை கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலமாக தன்னுடைய தேவைகளை வாங்குவதற்காக மக்களுக்கு வழி ஏற்படுத்தி தருகிறோம். ஆனால், அங்கு வரும் மக்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறிவிடுகிறார்கள். முககவசம் அணியாமல் செல்லுதல், கூட்டமாக கூடுதல், நெரிசலாக நிற்பது, இதை எல்லாம் பார்க்கும்போது மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது எனக்கு வேதனையைத்தான் தருகிறது.

அதனால்தான் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவு கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். சென்னையில் அப்படி பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே, கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடந்துக்கொள்ளக்கூடாது.

கூட்டமாக கூடுவதின் மூலமாக கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என்று, மீண்டும், மீண்டும் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக்கொள்கிறேன். 3-வது அலையை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வல்லமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமாக தயார்நிலையில் இருக்கிறது.

இத்தகைய சூழலில் மக்கள் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதை, நான் சொல்ல தேவையில்லை. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ளுங்கள். தனியார் ஆஸ்பத்திரிகளும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளதை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்.

முதல், 2-வது அலைகளை விடவும் 3-வது அலை மோசமானதாக இருக்கும். ஸ்பானிஷ் காய்ச்சலை போல இருக்கும் என்று டாக்டர்கள் சொல்வதை பயமுறுத்தலாக இல்லாமல், நமக்கு தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வோம். ஜிகா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என்ற புதிய, புதிய படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் வெல்வோம்.

மிக, மிக அவசிய, அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். 2 முககவசங்களை பயன்படுத்துங்கள். வெளியில் வைத்து முககவசத்தை கழற்றவோ, எடுக்கவோ வேண்டாம். கைகளை சுத்தமாக வைத்திருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.