நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டது. அதுபோல், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா தலதவாடி டவுனில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த பள்ளியில் ஏற்றப்பட்ட தேசிய கொடி, 75 ஆண்டுகளுக்கு முன்பு, தலதவாடியில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்றப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
அதாவது தலதவாடி டவுனில் உள்ள அரசு பள்ளியில், நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததும் கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவு தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அந்த தேசிய கொடியை பள்ளி ஆசிரியரிடம் இருந்து, அதே கிராமத்தை சேர்ந்த கங்காதர் நரசிங்கராவ் குல்கர்னி என்பவர் வாங்கி வைத்திருந்தார். தற்போது அவருக்கு 91 வயதாகிறது. 1947-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த போது, கங்காதரிடம் தேசிய கொடியை ஆசிரியர் கொடுத்திருந்தார். அதன்பிறகு, அந்த தேசிய கொடியை கங்காதர் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட, அந்த தேசிய கொடியை எடுத்து தனது வீட்டில் கங்காதர் ஏற்றி மரியாதை செலுத்துவார். சுதந்திர தின பவள விழா காரணமாக தான் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் அந்த தேசிய கொடியை, தலதவாடி டவுனில் உள்ள அரசு பள்ளியில் ஏற்றுவதற்காக கங்காதர் கொடுத்திருந்தார். இதையடுத்து, அந்த பள்ளியில் நேற்று 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
75 ஆண்டுகள் தனிச்சிறப்பு பெற்ற தேசிய கொடியை பள்ளியில் ஏற்றியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த தேசிய கொடியை 1947-ம் ஆண்டு 25 பைசா கொடுத்து கங்காதர் வாங்கி இருந்தார். அன்று முதல் தற்போது வரை அந்த தேசிய கொடியை கங்காதர் பாதுகாத்து வருகிறார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டில் அந்த தேசிய கொடியை வைக்காமல், தலதவாடி கிராமத்தில் உள்ள வங்கியின் லாக்கரில் அவர் வைத்திருக்கிறார். தேசிய கொடிக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாக்கரில் வைத்திருப்பதாக கங்காதர் கூறியுள்ளார். தேசிய கொடி மீது கங்காதருக்கு இருக்கும் மரியாதையை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.