இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பலதரப்பட்ட வயதினரையும் வசீகரம் செய்துள்ளது. பலர் அதற்கு அடிமையாகி விட்டனர். குறிப்பாக பாடப்புத்தகங்கள் இருக்க வேண்டிய சிறுவர்களின் கையில் ஸ்மார்ட் போன்கள் உலாவுகின்றன. இதனை பெற்றோர் கண்டிக்கும் பட்சத்தில் மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
இந்த நிலையில் யவத்மாலில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பன்சி கிராம பஞ்சாயத்தில் தான் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கஜானன் டேல் கூறியதாவது:-
சிறுவர், சிறுமிகள் தற்போது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும், சமூகவலைத்தளங்களில் உலாவுவதற்கும் அடிமையாகி விட்டனர். இதனால் சிறிய குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க கிராம சபையில் முக்கிய முடிவு எடுத்தோம். இதன்படி 18 வயதுகுட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த முடியாது.
இந்த முடிவை செயல்படுத்தும் போது தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். அதன்பிறகும், சிறுவர்களுக்கும் செல்போன் பயன்படுத்துவதை பார்த்தால் அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளை மீண்டும் படிக்க செய்ய வேண்டும், செல்போன்களால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “மராட்டியத்தில் உள்ள கிராமத்தில் தான் முதல்முறையாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆச்சரியப்பட வைக்கும் முறையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற கிராமங்களிலும் முயற்சி செய்ய தன்னார்வ தொண்டர்கள் முன்வர வேண்டும்” என்றார்.