X

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வழக்கு! – தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு அளித்த விவகாரத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர்.

எனவே காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை.

இதனால் 18 தொகுதிகளைச் சேர்ந்த 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வழியில்லாமல் தவிக்கிறார்கள்.

எனவே 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.