Tamilவிளையாட்டு

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 10 அணிகளின் 85 வீரர்கள் விடுவிப்பு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 16-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23-ந்தேதி கொச்சியில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான வீரர்கள் தக்க வைப்பு, விடுப்பு பட்டியலை 15-ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்க கெடுவிதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் விவரத்தையும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரங்களையும் வெளியிட்டுள்ளன.

10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 85 வீரர்களை விடுவித்து உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஓய்வு பெற்ற பொல்லார்டு, பேபியன் ஆலன், மில்ஸ் உள்பட 13 வீரர்களையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன் உள்பட 12 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வால், ஓடியன் சுமித் உள்பட 9 வீரர்களையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் உள்பட 16 வீரர்களையும் விடுவித்தன.

பெர்குசன், ஜேசன் ராய் உள்பட 6 வீரர்கள் குஜராத் அணியில் இருந்தும், மனிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர் உள்பட 7 பேர் லக்னோ அணியில் இருந்தும், ரூதர் போர்டு உள்பட 5 பேர் பெங்களூர் அணியில் இருந்தும், ஜேம்ஸ் நீசம், கருண் நாயர் உள்பட 9 பேர் ராஜஸ்தான் அணியில் இருந்தும், ஷர்துல் தாகூர் உள்பட 5 வீரர்கள் டெல்லி அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டன.

10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.20.45 கோடி கையிருப்பு இருக்கிறது. பெங்களூர் அணியிடம் ரூ.8.75 கோடி யும், ராஜஸ்தானிடம் ரூ.13.2 கோடியும், டெல்லியிடம் ரூ.19.45 கோடியும், மும்பை யிடம் ரூ.20.55 கோடியும், பஞ்சாப்பிடம் ரூ.32.2 கோடியும், கொல்கத்தா விடம் ரூ.7.05 கோடியும், குஜராத்திடம் ரூ.19.25 கோடியும், ஐதராபாத்திடம் ரூ.42.25 கோடியும், லக்னோ விடம் ரூ.23.75 கோடியும் கையிருப்பு இருக்கிறது.