தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது. இந்த முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது வந்திருக்கக்கூடிய இந்த முதலீடுகளில் குறிப்பாக வாகன உற்பத்தி மின்னணு பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகள் இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சன்தாக் நிறுவனத்துக்கு அவர்களின் முதலீடாக 21 ஆயிரத்து 340 கோடி ரூபாய், வேலைவாய்ப்பாக 1,114 பேர்களுக்கு அந்த வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய திட்டம்.
காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம். ஈரோட்டில் மில்கி மிஸ்ட் உணவு பதப்படுத்தும் தொழிலில் ரூ.1,777 கோடி முதலீட்டில் 2025 பேர்களுக்கு வேலைவாய்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோகன் கீரிம்டெக் முதலீடு 1,597 கோடி ரூபாய். வேலைவாய்ப்பு 715 பேர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீடுகளாக அமைந்திருக்கிறது.
இது தவிர உலகளாவிய திறன் மையங்களுக்கான அவற்றின் விரிவாக்கங்களுக்காக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ். மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களது மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது. எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ ரூ.44 ஆயிரத்து 125 கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் 15 புதிய நிறுவனங்களில் வந்திருக்கிறது. ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேருக்கு இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இது தவிர இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நமது முதலமைச்சர் வரக்கூடிய 17-ந்தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட் டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டம் வல்லம் படுகால் பகுதியில் ரூ.706.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் பாக்ஸ்கான் நிறுவனத்துக்காக கட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 3 முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை மூலமாக குறிப்பாக பட்ஜெட்டில் கூட இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.
தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம். தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள். அதற்கான கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக்கான கொள்கைக்கும் அனுமதி கொடுத்துள்ளோம்.
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். வரக்கூடிய 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட்உற்பத்தி நிறுவு திறனை நாம் அடைய வேண்டும் என்கிற இலக்கை முதலமைச்சர் நிறுவி இருக்கிறார்கள்.
இப்போது இருக்கக்கூடிய நிலையற்ற பசுமை எரி சக்தியை நாம் சமப்படுத்தப்பட்ட மின்சாரமாக மாற்றுவதற்கு கட்டமைப்பை உருவாக்கி கிரிடில் அதை கொண்டு வருவதற்காக இந்த 3 கொள்கைகளை நாம் கொடுத்துள்ளோம். இந்த திட்டங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அள வுக்கு முதலீடுகள் இருப்பதால் தனியார் பங்களிப் போடு செய்வது அவசியமாக இருக்கிறது.
அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் இவைகளுக்காக இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்களில் கூட்டு முயற்சியில் செயல்படுத்தக்கூடிய திட்டம். அதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் 100 சதவீதம் நமது மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என்கிற ஒரு திட்டம்.
நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம். அது தவிர தனியார் மூலமாக செய்யக்கூடிய முறை என 3 வகையாக பிரித்துக்கொண்டு இந்த கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்கைக்கு பல்வேறு சலுகைகளும், கட்டணங்களும் வழங்கி இருக்கிறோம்.
சிறிய புனல் திட்டமும் கொடுத்துள்ளோம். தூய்மையான மாசற்ற மின்சாரத்தை உருவாக்க இது சரியாக இருக்கும். காற்றாலையை புதுப்பிக்கும் கொள்கை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.