15 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்ட 17 வயது சிறுவன் – போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இதுபற்றி குழந்தைகள் நல குழுவினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்திய போது காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் கடந்த 7-ந்தேதி எல்லையம்மன் கோவில் முன்பு தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. இதனை அவர்களது நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

தற்போது இது சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அவரவர் வீட்டுக்கு வந்து விட்டனர். இதனால் சிறுமிக்கு திருமணம் ஆனது குறித்து வீட்டில் இருந்த உறவினர்களுக்கு தெரியவில்லை. திருமண வீடியோ பதிவு வெளியே வந்த பின்னர் தான் இது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

போலீசார் விசாரணை நடத்துவது பற்றி தெரிந்ததும் அந்த சிறுவன் தப்பி ஓடி விட்டான். அவனை பிடித்து மேலும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது காதல் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பாலியல் ரீதியாக உறவில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுமியை மீட்டு போலீசார் கெல்லீசில் உள்ள மையத்தில் தங்க வைத்து உள்ளனர். அவருக்கு ஆலோசனை வழங்க குழந்தைகள் நல அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். திருமணம் செய்த இருவரும் சிறுவன், சிறுமி என்பதால் அவர்கள் மீது என்ன மாதிரியான நட வடிக்கை எடுப்பது என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். சிறுமியை, சிறுவன் திருமணம் செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.