X

14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி மருத்துவர் கைது!

ஒடிசா மாநிலம் கேந்திரா பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பிதுபிரகாஷ் சுலைன் என்ற ரமேஷ்லைன். 54 வயதான இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

இவர் தன்னை ஹோமியோபதி டாக்டர் என கூறி வலம் வந்தார். கடந்த 1982-ம் ஆண்டு இவர் ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவருடன் 20 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார்.

இந்த வாழ்க்கை அவருக்கு கசந்ததால், 2002-ம் ஆண்டு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவரிடம் முதல் திருமணத்தை மறைத்து குடும்பம் நடத்தினார். முதல் 2 மனைவிகளுக்கும் 5 குழந்தைகள் உள்ளன. 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் பிறந்த பிறகும் பிதுபிரசாத் சுலைனுக்கு மோகம் தீரவில்லை.

2 மனைவிகளுக்கும் தெரியாமல் 3-வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக இணையதளத்தில் மணப்பெண் தேவை என விளம்பரப்படுத்தினார்.

தன்னை டாக்டர் என்றும் மத்திய அரசின் குடும்ப நலத்துறையில் இயக்குனராக பணிபுரிவதாகவும், கை நிறைய சம்பளம் கிடைப்பதாகவும் தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார். இதை நம்பி பல பெண்கள், அவரை திருமணம் செய்ய முன்வந்தனர்.

அவர்களில் நடுத்தர வயதுடைய பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து 3-வதாக திருமணம் செய்தார். 2 மனைவிகளுக்கும் தெரியாமல் வேறொரு இடத்தில் குடியமர்த்தி குடும்பம் நடத்தினார்.

அதன் பிறகுதான் அவருக்கு புதுவிதமான யோசனை பிறந்தது. தொடர்ந்து அவர் விவாகரத்தான பெண்கள் மற்றும் படித்த பெண்களை தேர்வு செய்து அவர்களை அடுத்தடுத்து திருமணம் செய்தார்.

2002-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக அவர் ஒவ்வொரு மனைவிக்கும் தெரியாமல் மற்ற பெண்களை தன் வாழ்க்கை துணை ஆக்கினார். இவரது வலையில் படித்த பெண்கள், வக்கீல், ஆசிரியை உள்பட பல பெண்கள் விழுந்தனர்.

தன்னுடைய மோசடி வெளியில் தெரியாமல் இருப்பதற்காக மாநிலம் விட்டு மாநிலம் சென்று பெண்களை திருமணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டார்.

திருமணம் செய்யும் பெண்களை அவர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்து வந்தார். திருமணமான சில நாட்களில் அவர் அந்த பெண்களிடம் தனது முழு நம்பிக்கையை பெறுவார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிதுபிரசாத் சுலைன், திருமணமான சில நாட்களில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி அந்த பெண்களிடம் இருந்து நகை, பணத்தை கறக்க ஆரம்பித்தார்.

இப்படி தன்னிடம் ஏமாந்த பெண்கள் அனைவரிடமும் அவர் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டி விடுவார். இப்படி ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட், ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த 14 பெண்களை மயக்கி அவர் திருமணம் செய்து ‘கல்யாண மன்னனாக’ பல இடங்களில் வலம் வந்தார்.

2018-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பள்ளி ஆசிரியையை அவர் கடைசியாக திருமணம் செய்தார். டெல்லியில் உள்ள கோவிலில் அவர் மாலை மாற்றி திருமணம் செய்தார். பின்னர் அவரை ஒடிசா மாநிலத்துக்கு அழைத்து வந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தார். அன்று இரவு அவர்களுக்கு முதல் இரவும் நடந்து முடிந்தது.

அப்போது அந்த ஆசிரியையிடம் நைசாக பேசி ரூ.10 லட்சம் நகை, பணத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை அவரை பற்றிய விவரங்களை இணைய தளத்தில் தேடினார்.

அப்போதுதான் அவருக்கு பிதுபிரசாத் சுலைன் பற்றிய அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது. தன்னை போல அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதனால் தான் மட்டுமல்லாமல் பல பெண்களை அவர் ஏமாற்றிவிட்டார் என போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் பிதுபிரகாஷ் சுலைனை தேடி வந்தனர். சம்பவத்தன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 11 ஏ.டி.எம். கார்டுகள், 4 ஆதார் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 14 பெண்களை தவிர வேறு பெண்களையும் இவர் ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.