டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஒரு சீட்கூட பெறவில்லை.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார். அதன்பின்னர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போது கெஜ்ரிவால், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் தேதி, மற்றும் புதிய மந்திரி சபை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
அநேகமாக பிப்ரவரி 14-ம் தேதி கெஜ்ரிவால் பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 2015 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், கெஜ்ரிவால் பிப்ரவரி 14ம் தேதி பதவியேற்றார். எனவே, இந்த முறையும் அதே தேதியை முடிவு செய்யலாம், அல்லது 16-ம் தேதியை முடிவு செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.