X

139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைப்பு

சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள். பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகளுடன் மாநகராட்சி பள்ளிகள் தன் பங்களிப்பை வழங்கி வருவதால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன. இந்நிலையில் சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இதனால் நிர்வாக ரீதியான பிரச்சினை உருவானது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த பள்ளிகள் செயல்பட்ட வந்தன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இத்தகைய பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அந்த பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டு என மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அதன்படி 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டன. அந்த பள்ளிகள் “சென்னை பள்ளிகள்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மாநகராட்சி கல்வி துறை மூலம் இனி இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இப்பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.