தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.