13ஆம் தேதி குரு பூர்ணிமா – நேரலையில் வருவதாக நித்யானந்தா அறிவிப்பு

சர்ச்சை சாமியார் நித்யானந்தா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமாதி நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், உலக நன்மைக்காக சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் சத்சங்க உரையாற்றுவேன் என கூறப்பட்டிருந்தது.

நித்யானந்தா சமாதி நிலைக்கு சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், வருகிற 13-ந் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு, மீண்டும் நேரலையில் தோன்றி தரிசனம் தர இருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது சீடர்கள் வீடியோ வெளியிட்டு தகவல்களை பரப்பி வருகின்றனர்.

கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, ‘நாயகன் மீண்டும் வரார்’ என்ற பதிவுடன் உள்ள அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு நித்யானந்தா மரணம் அடைந்ததாக தவறான தகவல் பரவியதை தொடர்ந்து அவர் தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில் மெல்லிய தேகத்துடன் காட்சி அளித்த நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. எனினும் தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.

தற்போது அவர் மீண்டும் நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் அவரது சமாதி நிலை முடிவுக்கு வரும் என தெரிகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் நேரலையில் தோன்ற இருப்பது அவரது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools