12 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசியர்கள் செல்போன் அனுமதி இல்லை – பள்ளி கல்வித்துறை உத்தரவு

பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடக்க உள்ளது.

விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிகளவில் வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின்போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மதிப்பீடு செய்யும்போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்படவேண்டும்.

* உதவித்தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மைக்கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் சரிபார்க்கும்போது கவனக்குறைவினால் அதிகபட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் புகார் பெறப்பட்டது. இதனால் தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்வினை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவித்தேர்வாளர்கள் மீது தக்க நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.

* மதிப்பீட்டுப் பணியின்போது தேவையில்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போனை திருத்தும் அறையில் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* மதிப்பீடு செய்ததில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்கவேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools