12 ஆம் தேதி பீகாரில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் – காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் உள்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 16 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்தி உள்ளன. மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. என்றாலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களை நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் வருகிற 12-ந்தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 12-ந்தேதி வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதால் பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கார்கேவும் ராகுலும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு நிதிஷ்குமார் பல தடவை தொடர்ந்து வலியுறுத்தி அழைத்து விட்டார். என்றாலும் கார்கே, ராகுல் இருவரும் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
கார்கே, ராகுல் இருவரும் 12-ந்தேதி கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜூன் 23-ந்தேதி நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கவில்லை. ஜூன் 12-ந்தேதி கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதால் கூட்டத்தை ஒத்தி வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் முதல் ஆலோசனை கூட்டம் இது தான். முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் பங்கேற்காதது நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்குகடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். கார்கே, ராகுலுக்கு பதில் காங்கிரசில் உள்ள மிக முக்கிய மூத்த தலைவரை 12-ந்தேதி கூட்டத்துக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முதல்-மந்திரிகளில் ஒருவரை ஆலோசனை கூட்டத்துக்கு அனுப்புமாறு சரத்பவார் ஆலோசனை தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் சார்பில் ராகுலுக்கு பதில் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமே ராகுலால் முழுமை பெறாமல் போய்விடுமோ என்று பேசப்படுகிறது. குறிப்பாக மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.