Tamilவிளையாட்டு

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடங்குகிறது

ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி வரை ஆமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்து பெங்களூரு (வருகிற 8-13), புனே (15-20), சென்னை (22-27), நொய்டா (டிச.29-ஜன.3) மும்பை (ஜன.5-10), ஜெய்ப்பூர் (ஜன.12-17), ஐதராபாத் (ஜன.19-24), பாட்னா (ஜன.26-31), டெல்லி (பிப்.2-7), கொல்கத்தா (பிப்.9-14), பஞ்ச்குலா (பிப்.16-21) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் பிளே-ஆப் சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி களம் இறங்குகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும். லீக்கில் டாப்-2 இடங்களை கைப்பற்றும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். கடந்த ஆண்டு ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தோற்று அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி சாகர் தலைமையில் களம் காண்கிறது. எல்லா அணிகளின் சொந்த ஊரிலும் போட்டி அரங்கேறுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் பசெல் அட்ராசலி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ், பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சுரிந்தர் சிங் தலைமையிலான மும்பா-பர்தீப் நர்வால் தலைமையிலான உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.