ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசின் எந்த ஒரு செயலையும் குறை சொல்வதே எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் விஷயத்தில் ஆந்திராவையும், கேரளாவையும் தமிழகத்துடன் ஒப்பிட தேவையில்லை. மாணவர்களின் நலனையும், பெற்றோர்களின் கருத்தையும் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பை வழங்கி உள்ளது தமிழக அரசுதான். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தை கேட்டு அதன் முடிவு அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.