12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகிறது
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் நடந்து முடிந்துள்ளது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட இதர பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே 5-ந்தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே நீட் தேர்வு மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிடுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், தேர்வு முடிவு வெளியீடு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனை ஏற்று நீட் தேர்வுக்கு பின்பு பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மே 8ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.