Tamilசெய்திகள்

117 பெண் வேட்பாளர்களை களம் இறக்கும் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்போதும் போல தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்தலில் ஆணுக்கு பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடங்களை நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஒதுக்கி வருகிறது.

அந்த வகையில் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். மீதம் உள்ள 117 தொகுதிகளில் ஆண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவுபெற்று விட்டன.

மீதமுள்ள பணிகளும் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து இறுதி வடிவம் பெற்றுவிடும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்படுகின்றன. வேட்பாளர் பட்டியலை சீமான் அறிவிக்கிறார்.

இந்த நிலையில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் சீமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.