11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உச்ச நீதிமன்றம்
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாண்டியராஜன், சண்முகநாதன், செம்மலை, ஆறுகுட்டி, நட்ராஜ், சின்னராஜ், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன் ஆகிய 10 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதுபற்றி சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை எதிர்த்து தி.மு.க. கொறடா சக்கரபாணி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா முகர்ஜி முன்னிலையில் அந்த வழக்கு விசாரணை நடந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, சபாநாயகர் முடிவே இறுதியானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதோடு 11 பேர் தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தி.மு.க. கொறடா சக்கரபாணி, டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் சுப்ரீம் கோர்ட் டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் சுப்ரீம்கோர்ட்டில் இன்று இது தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் தங்க தமிழ் செல்வனின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி அந்த மனுவை ஆய்வு செய்து தங்க தமிழ்செல்வனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்.
அவர் கூறுகையில், “11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக புதிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
இதையடுத்து ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.