10,000 ரன்களை கடந்து டோனி சாதனை!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, நிர்யணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி இருவரும் நிதானமாக விளையாடினர். டோனி இந்த போட்டியில் முதல் ரன்னை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் மொத்த ரன்கள் அடிப்படையில், சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். கங்குலி 11,221 ரன்களும், டிராவிட் 10,768 ரன்களும், விராட் கோலி 10,232 ரன்களும் எடுத்துள்ளனர்.