1000 போட்டிகளில் வெற்றி பெற்று டென்னிஸில் புதிய சாதனை படைத்த நடால்
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால்(ஸ்பெயின்) இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். ‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடால் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பெலிசியானோ லோப்சை போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். 2002-ம் ஆண்டில் முதலாவது வெற்றியை பெற்ற நடால் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதுவரை 1,201 ஆட்டங்களில் ஆடியுள்ள நடால் அதில் 86 பட்டங்களுடன் ஆயிரம் வெற்றிகளும், 201 தோல்விகளும் கண்டுள்ளார்.
ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 4-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (1274 வெற்றி), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1242), அமெரிக்காவின் இவான் லென்டில் (1068) ஆகியோர் உள்ளனர்.
34 வயதான நடால் கூறுகையில், ‘இந்த ஆயிரமாவது வெற்றி எனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்த்துகிறது. இச்சாதனையை அடைவது எளிதல்ல. மிக நீண்ட காலம் சிறப்பாக விளையாடினால் மட்டுமே முடியும். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.