இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி அபார பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தது.
நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி ஆட்டமிழக்கச் செய்தார். நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் விக்கெட், முகம்மது சமிக்கு 100-வது விக்கெட்டாக அமைந்தது.
இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியிருந்தார்.