X

100 வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கும் புஜாரா!

Cheteshawr Pujara will eager to make a big contribuition. Photo: Twitter/BCCI

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார். ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடி உள்ளனர்.

புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார். அவர் மொத்தம் 15,797 பந்துகளை சந்தித்துள்ளார்.

புஜாரா 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். அந்த டெஸ்டில் 4 மற்றும் 72 ரன்கள் வீதம் எடுத்தார்.

2017-ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்கள் குவித்தார். ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் இவர் தான்.

100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.