இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது.
இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்தார். இதன்மூலம் பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிக்சர் விளாசி இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் 100வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இன்சமான் உல் ஹக்கின் உலக சாதனையையும் ஜோ ரூட் முறியடித்தார்.
இன்சமாம் உல் ஹக் 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
இதேபோல் 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் 100 போட்டிகளில் 8,405 ரன்கள் எடுத்திருந்தார். ஜோ ரூட் 8,458 ரன்கள் எடுத்துள்ளார்.
இப்போட்டியில் ஜோ ரூட் 218 ரன்கள் குவித்த நிலையில், நதீம் பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர், 6 விக்கெட் இழப்பிற்கு 477 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது.
——————