பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை பற்றி பொய் பேசினால் இங்குள்ள மக்கள் நம்பமாட்டார்கள் என்று பிரதமர் மோடிக்கு தெரியும். அதனால் அவர் என்னை பற்றி கலபுரகியில் பேசவில்லை. மல்லிகார்ஜுன கார்கே என்று சொன்னவுடன் மக்களின் காதுகளில் வளர்ச்சி என்ற சொல்லே விழுகிறது.
அதனால் மோடி வேறு ஒன்றும் பேசாமல் அமைதியாக தான் இருக்க முடியும். என்னை பற்றி பேசாமல் இருந்ததும் மோடியின் வியூகங்களில் ஒன்றாகும். பிரதமரே கலபுரகிற்கு வருகிறார் என்று அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கல் ஊரை, தங்க கல் ஊராக மாற்றுவிடுவாரோ என்ற ஆசையுடன் எதிர்பார்த்து இருந்தேன்.
ஆனால் அவர் வெறும் கையுடன் வந்து அப்படியே சென்றுவிட்டார். இதற்காக இங்கு வரை பிரதமர் வந்திருக்க வேண்டுமா?. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்த கலபுரகி மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு பணியை செய்திருப்பாரா?. என்ன செய்தார் என்று அவர் பேசி இருக்க வேண்டும். ஏதாவது செய்திருந்தால் தானே பேச முடியும்.
ரெயில்வே கோட்ட அலுவலகம், வெளிவட்டச்சாலை, விமான நிலையம் உள்பட பல்வேறு அமைப்புகளை நாங்கள் கலபுரகிற்கு கொண்டு வந்தோம். கலபுரகி தொகுதி வளர்ச்சி பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி கிடைக்காமல் அப்படியே கிடப்பில் உள்ளன.
எனக்கு வயதாகிவிட்டது. இதுவே எனக்கு கடைசி தேர்தல் என்று பலர் பேசிக்கொள்கிறார்கள். நான் பிறவியிலேயே போராட்டக்காரன். இது எனக்கு கடைசி தேர்தல் அல்ல. என்னை தோற்கடிக்க மோடி உள்பட பலரும் சதி செய்கிறார்கள்.
ஆனால் என்னை வெற்றி பெற வைப்பதோ அல்லது தோற்கடிக்க வைப்பதோ இந்த தொகுதி மக்களின் கைகளில் தான் உள்ளது. அது மோடி கையில் இல்லை. 100 மோடிகள் வந்தாலும், என்னை அசைக்க முடியாது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.