X

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சரியாக நடைபெறவில்லை – துரைமுருகன்

தமிழக சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பொது கணக்கு குழு தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது கணக்கு குழு அதிகாரிகள்(ஏ.ஜி.) கொடுத்த அறிக்கை அடிப்படையில் அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்போம். இதற்கு அவர்கள் பதில்கள் சொல்வார்கள், சிலர் பதில் சொல்வதிலே விளக்கம் தருவார்கள். அப்போது சிலர் குற்றச்சாட்டை ஒத்துக்கொள்வார்கள். பிறகு அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி மீண்டும் பொது கணக்கு குழு ஒரு அறிக்கை தயாரித்து சட்டமன்றத்தில் வைக்கும். அதற்கு பிறகுதான் அதுபற்றி நடவடிக்கை எடுப்பார்கள்.

எந்தெந்த துறையில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது எனக்கேட்டால், அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. ஏனென்று கேட்டால் இது ரகசியமாக இருக்க வேண்டும் என்பதாகும். எனவே நாங்கள் கொடுக்கும் அறிக்கை, ஏ.ஜி. கொடுக்கும் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கும் வரையில் வெளியிடக்கூடாது. அதேபோல் நாங்கள் கொடுக்கும் அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்கும் வரை வெளியில் கொடுக்கக்கூடாது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் பணிகள் தாமதம், குறைபாடு என்று சொல்ல முடியாது. இந்த குறைபாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பற்றி நீங்கள் வெளியில் கேட்டால் சரியாக சொல்லி இருப்பேன். கலெக்டர் மற்றும் அதிகாரிகளை உட்கார வைத்துக்கொண்டு கேட்டால், நான் என்ன பதில் சொல்வது?. ஆனால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சரியான முறையில் நடைபெறவில்லை.

நான் நீண்டநாளைக்கு பிறகு இப்போது தான் சேலம் வந்துள்ளேன். என்னை ஒரு பாலம் வழியாக அழைத்து வந்தார்கள். அது பெரிய பாலம், நல்ல திட்டம் தான். இந்த ஆய்வு கூட்டத்தை நல்ல முறையில் செய்த மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து துரைமுருகன் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பனமரத்துப்பட்டியில் இயங்கி வரும் எம்.சாண்ட் கிரசர் குவாரியை ஆய்வு செய்தபோது துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வில் எல்லோரும் முதல்-அமைச்சர் பதவிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அப்படி என்றால் ஏற்கனவே முதல்-அமைச்சராக இருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க தயாரா?. வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?, என்றார்.

Tags: south news