பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் ஓட்டு பதிவாக வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறனர். குறிப்பாக, தென்சென்னை தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 100 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இதில் தி.மு.க.வை சேர்ந்த முரசொலிமாறன் வெற்றி பெற்றார்.
அதேபோல், கடந்த 10 பாராளுமன்ற தேர்தல்களில் 40 முதல் 60 சதவீத ஓட்டுகள் பதிவானது. எனவே இந்த முறை 100 சதவீதம் ஓட்டுகள் பதிவாவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் 100 சதவீதம் ஓட்டுகள் பதிவாவதற்கு பல்வேறு யுக்திகள் கையாளப்படுகிறது.
குறிப்பாக ‘விரலில் வைத்த மை அடையாளத்தை காண்பித்து செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் வருகிற 20-ந்தேதி ஓட்டல்களில் சாப்பிட செல்லும் போது 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்’ என்று செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் திருவொற்றியூரில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 86 வாக்காளர்களுக்கு 311 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 109 பேருக்கு 237, பெரம்பூர் தொகுதியில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 787 பேருக்கு 284, கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 992 பேருக்கு 239, திரு.வி.க. நகர் தொகுதியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 317 பேருக்கு 181 உள்பட மொத்தம் 14 லட்சத்து 84 ஆயிரத்து 689 வாக்காளர்களுக்கு 1,458 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், விருகம்பாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 78 வாக்காளர்களுக்கு 270 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 355 பேருக்கு 254, தியாகராயநகர் தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 49 பேருக்கு 229, மயிலாப்பூர் தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 453 பேருக்கு 262, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 462 பேருக்கு 261, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்களுக்கு 643 உள்பட மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 வாக்காளர்களுக்கு 1,919 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் வில்லிவாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 408 வாக்காளர்களுக்கு 244 ஓட்டுச்சாவடிகள், அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், எழும்பூர் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 700 பேருக்கு 173, துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 624 பேருக்கு 174, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேருக்கு 220 ஓட்டுச்சாவடிகள், ஆயிரம்விளக்கு தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 462 பேருக்கு 239, அண்ணாநகர் தொகுதியில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 502 பேருக்கு 253 உள்பட ஆக மொத்தம் 13 லட்சத்து 43 ஆயிரத்து 167 வாக்காளர்களுக்கு 1,303 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்களுக்கு 4 ஆயிரத்து 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி பார்த்தால், சராசரியாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரத்து 33 வாக்காளர்கள் வந்து ஓட்டுகள் போட வேண்டியிருக்கிறது.
அதிகபட்சமாக தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 ஓட்டுகளுடன், தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 20 லட்சத்து 6 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டியிருக்கிறது. 100 சதவீதம் வாக்கு பதிவாக வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.