X

100-க்கு 138 மதிப்பெண்கள் – 12ம் வகுப்பு மாணவிக்கு அதிர்ச்சியளித்த மதிப்பெண் பட்டியல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி பிளஸ்-1 படித்து வந்தார்.

தற்போது இவர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வை, தனித்தேர்வராக எழுதி இருந்தார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இதை தொடர்ந்து ஆர்த்தி தனது தேர்வு முடிவை ஆன்லைனில் பார்த்தார். அப்போது தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் என்று பட்டியலில் அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் மதிப்பெண் பட்டியலில் ஆங்கில பாடத்தில் 100-க்கு 92, கணிதத்தில் 56, இயற்பியலில் 75, வேதியியலில் 71, உயிரியலில் 82 என்று தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 514 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 4 பாடங்களில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மாணவியை மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் இடம்பெற்று இருப்பது பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. தன் மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்டுள்ள பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மாணவி ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.