X

100 கோடி ரூபாயில் படம் தயாரிப்பது பெரிய விசயம் இல்லை! – ’கவுண்டம்பாளையம்’ பட விழாவில் நடிகர் ரஞ்சித் பேச்சு

வில்லன், நாயகன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென்று தனி இடம் பிடித்த நடிகர் ரஞ்சித், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.

ஸ்ரீ பாசத்தாய் மூவிஸ் மற்றும் எஸ்.பி.எஸ் மூவிஸ் நிருவனங்கள் சார்பில், எஸ்.சுப்பிரமணியம் மற்றும் எஸ்.பழனிசாமி இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கவுண்டம்பாளையம்’. இப்படத்தில் ரஞ்சித் நாயகனாக நடித்திருப்பதோடு, எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். இதில் மற்றொரு நாயகனாக அறிமுக நடிகர் அனிஷ் நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை அல்பியா நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் பழனிசாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருப்பதோடு, சுமார் 36 புதுமுகங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, பிரவீன் காந்தி, ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன், தயாரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் சவுந்தரராஜன், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் விஜய் சங்கர் பேசுகையில், ”என் முதல் ஸ்வரம் ‘வசூல்’, இரண்டாம் ஸ்வரம் ‘நீயும் நானும்’, மூன்றாவது ஸ்வரம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’, நான்காவது ஸ்வரம் ‘ஸ்பார்க்’, ஐந்தாவது ஸ்வரம் ‘மாற்றம்’, ஆறாவது ஸ்வரம் ‘பாட்டி சொல்லை தட்டாதே’, ஏழாவது ஸ்வரம் ‘கவுண்டம்பாளையம்’ இந்த ஏழாவது ஸ்வரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை உங்கள் அனைவருக்கும் உண்டு. தவறான பாதையில் கண் மூடித்தனமாக செல்லும் இளைஞர்களுக்கான படம் அல்ல ஒரு பாடம். அண்ணன் ரஞ்சித்தின் வசனங்கள் சிந்தனையை தூண்டுபவை. என்னிடம் செல்லமாக வேலை வாங்கியிருக்கிறார். 30 ஆண்டுகள், 500 படங்களுக்கு மேல் பணியாற்றிய பிறகு என் குரல் திரையில் வந்திருக்கிறது, அதற்கு காரணமானவர் அண்ணன் ரஞ்சித். செந்தமிழன் சாரின் பாடல் வரிகள் சிறப்பாக இருந்தது. ரஞ்சித் அண்ணனை எல்லோருக்கும் பிடிக்கும், எல்லா குடும்ப தலைவருக்கும் பிடிக்கும், அண்ணனை பார்க்க விரும்புவார்கள், இது குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம்.” என்றார்.

நாயகன் அனிஷ் பேசுகையில், “கவுண்டம்பாளையம் இது எனக்கு எமோஷனால விசயம், டான்ஸ்ராக இருந்த என்னை இன்னொரு நாயகனாக்கின ரஞ்சித் சாருக்கு நன்றி. இங்க பெரியவர்கள் இருக்கிறார்கள் , அவர்கள் முன்னாடி நிற்பதே பெருமை. இதில் எனக்கு நிறைய அனுபவங்கள். இந்த படத்துல என்ன மாதிரி நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள், எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருர்களுக்கு நன்றி. நான் பயந்து தான் நடிச்சேன். ஹீரோயினும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க அவங்களுக்கும் நன்றி. கேமரா மேன் பாபு சாரும் ரொம்ப ஊக்கம் கொடுத்தாரு. செந்தமிழன் சார் வசனம் நன்றாக சொல்லிக் கொடுத்தாரு, அவருக்கு நன்றி. ரஞ்ச்சித் சார், கோவில் கட்டி தேருக்கு மேல ஒரு சாமி போல வச்சி பார்த்தாலும் போதாது, எனக்கு அவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார், இதை என்னால் மறக்கவே முடியாது, அவருக்கு நன்றி சொல்லிக்  கொள்கிரேன். இது சூப்பரான கதைக்களம், நிச்சயம் பெரிய வெற்றியடையும்.” என்றார்.

நாயகி அல்பியா பேசுகையில், “எனக்கு இது தான் முதல் படம், எனக்கு வாய்ப்பளித்த ரஞ்சித் சார், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், ஆதரவு தாருங்கள்” என்றார்.

தயாரிப்பாளர் பழனிசாமி பேசுகையில், “இந்த கவுண்டம்பாளையம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை ஏற்றிக்கொண்டிருக்கும் இயக்குநர் நடிகர் அன்பு மாம ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் சுப்பிரமணிய மாமா அவர்களுக்கு நன்றி.  இந்த படத்தில் புதுமுகம் என்றாலும் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்த அல்பியா, இன்னொரு நயன்தாரா போல வரனும். இந்த படம் நாடக காதலை மையமாக வைத்து தான் எடுத்திருக்கோம். நாங்க காதலுக்கு எதிரி இல்ல, நாடக காதல் பன்னாதீங்க என்று தான் சொல்ல வரும். நாடக காதலை தோலுறித்து காட்டியிருக்கிறோம். ஏழை பெண்ணை காதலிப்பது ரொம்ப குறைவு, ஏன் அதை செய்ய மாற்றீங்க, அதனால் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.” என்றார்.

கனல் கண்ணன் பேசுகையில், “ரஞ்சித் மாமாவை பார்க்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. நான் சேரன், பி.எல்.தேனப்பன் ஆகியோர் எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா, வந்துவிடுவோமா என்று நினைத்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தவர் ரஞ்சித் மாமா தான். அவர் மட்டும் அல்ல, அவரது தாய், தந்தையரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது எனக்கு தோன்றியது, எவன் ஒருவன் திருப்பியடிக்கிறானோ, அவனை திருப்பியடிக்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நசுக்குறாங்க, பிதுக்குறாங்க என்று சொல்றாங்க, சினிமாவில் யாரையும் நசுக்கவில்லை. அப்படி சொல்லி நசுக்கினால், நாங்கள் உங்களை பிதுக்கி விடுவோம், என்று சொல்லி படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜய முரளி பேசுகையில், ”சினிமால தான் சாதி கிடையாது, ஒரு தியேட்டரில் பக்கத்துல உட்கார்ந்திருப்பவன் என்ன சாதி என்று பார்ப்பதில்லை. அதனால படங்களை முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்டா எடுத்துட்டு போக வேண்டும், அதில் சில நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும். ரஞ்சித் அவர்களுக்கு சினிமாவில் இடைவெளி இருந்தாலும், டிவிக்கு போய் பெண்களோட ஆதரவு பெற்று திரும்பவும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். அதனால் இந்த படம் நிச்சயம் வரவேற்பு பெறும். அவர் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் வாழ்த்து கூறி விடை பெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “நடிகர் ரஞ்சித் இயக்குநர் என்ற புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பது இந்த மேடையை பார்க்கும் போதே தெரிகிறது. அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள், அப்படி ஆனால் அவர்களுக்கு அவர் அந்த அளவுக்கு நன்றி உள்ளவராக இருந்திருக்கிறார். சினிமாவில் நன்றி என்பது இல்லாதது, அது இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி.

கவுண்டம்பாளையம் படத்தின் டிரைலரை பார்த்த போதே இது நாடக காதலுக்கு எதிரான படம் என்பது தெரிகிறது. இதை தயவு செய்து சாதி படமாக பார்க்காதீர்கள், நாடக காதலுக்கு எதிரான படமாக பாருங்கள். எவன் ஒருவன் சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கிறானோ அவனே சிறந்த கலைஞன். அதை விட்டுவிட்டு, 1940, 1930 என எப்போதோ நடந்த சம்பவங்களை இப்போது பேசி படம் எடுத்தால் அவர்கள் கலைஞர்களே இல்லை. ஒரு பிரச்சனை நடந்து முடிந்துவிட்டால் அதை விட்டுவிட வேண்டும், இப்போது வந்து அதை ஊதி பெரிதாக்க நினைக்க கூடாது. பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தான் நாடக காதலின் வலி தெரியும். அதனால் இதை சாதி படமாக பார்க்காதீர்கள், நாடக காதலுக்கு எதிரான படமாக பாருங்கள். குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும், அதுபோல் நாடக காதலில் ஈடுபடுவர்களுக்கு தான் இந்த படம் கோபத்தை வர வைக்கும்.

கவுண்டம்பாளையம் என்ற தலைப்பை பார்த்தவுடன் இது கவுண்டர்களுக்கான படம் என்று சொல்வார்கள். அப்படி என்றால் பிள்ளையார்பட்டி என்ற பெயரில் பிள்ளை இருக்கிறதே அதை நீக்க முடியுமா?, வ.உ.சி சிதம்பரம் பிள்ளை என்றால் தான் எங்களுக்கு தெரியும், அவர் பெயரில் உள்ள பிள்ளையை நீக்கிவிட்டால் அவரை தெரியாது. முத்துராமலிங்க தேவர் என்றால் தான் அவரை தெரியும், வெறும் முத்துராமலிங்கம் என்றால் தெரியாது. அதனால் அதை சாதியாக பார்க்காமல் வரலாறாக பாருங்கள். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், சாதி சான்றிதழை ஒழியுங்கள். பள்ளியில் சாதி கேட்கபதை நிறுத்துங்கள். பிறகு வரலாற்றில் உள்ள சாதியை ஒழிக்கலாம். நாங்கள் அதை சாதியாக பார்க்கவில்லை வரலாறாக பார்க்கிறோம். எனவே இந்த கவுண்டம்பாளையம் படமும் சாதி படம் அல்ல, நாடக காதலுக்கு எதிரான படம். இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “தம்பி நடிகர் ரஞ்சித்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட பயணம். அவர் என் ஊரை சேர்ந்தவர். என் ஊரில் நான் படித்த கல்லூரியில் தான் அவரும் படித்தார். பிறகு சென்னைக்கு வந்து நான் திரைப்படக் கல்லூரியில் படித்தேன், அதே கல்லூரியில் அவரும் படித்தார். நான் இருக்கும் சினிமா துறையில் அவரும் இருக்கிறார். இந்த தொடர்புகளை தாண்டி அவர் என் உறவினர், என் தம்பி என்பதால் அவருக்கும் எனக்குமான பினைப்பு அதிகம். அவரை அடிக்கடி பார்க்கவில்லை என்றாலும், என் மனதில் அவருக்கு எப்போதும் இடம் உண்டு.

தம்பி ரஞ்சித்துக்கு இயக்குநராக இது இரண்டாவது படம், ஏற்கனவே அவர் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவர் இந்த படத்தை மிக சிறப்பாக இயக்கியிருப்பார் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.  அதுமட்டும் அல்ல, ஊரில் இருப்பவர்களை நடிகராக்கியிருக்கிறார். தயாரிப்பாளரை கூட நடிகராக்கி விட்டார். அதற்கு தைரியம் வேண்டும். இயக்குநர்களுக்கு அந்த தைரியம் வராது, நடிகராக ரஞ்சித்துக்கு அந்த தைரியம் இருக்கிறது, அதனால் தான் புதுமுகங்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இங்கு பேசியவர்கள் சாதி படமாக பார்க்க கூடாது என்றார்கள், நானும் சின்ன கவுண்டர் படம் எடுத்திருக்கிறேன், உடனே நம்பள ரவுண்ட் கட்ட போறாங்க என்று நினைத்தேன். ஆனால் , நான் படம் எடுத்தது உணர்வுப்பூர்வமாக எடுத்தேன், மற்றபடி சாதியை வைத்து எடுக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. இங்கு பேசும் போது அந்த இயக்குநர்கள் அப்படி இப்படி, என்று சொன்னார்கள். அப்படி பேச கூடாது, இயக்குநர்கள் நாம் அனைவரும் ஒரே குடும்பம் தான். நாம் இங்கு பேசுவதை வைத்துக்கொண்டு மீடியாக்கள் வேறு மாதிரியாக சொல்லிவிடுவார்கள், பிறகு அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும். இளையராஜா சார் விவகாரத்திலும் அது நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே இயக்குநர்கள் நாம் அனைவரும் ஒன்று தான்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை சொல்ல வேண்டும், அது சாதி படமாக இருந்தாலும் அதை நல்ல படைப்பாக பார்க்க வேண்டும். அப்படி தான் இந்த படத்தையும் நான் பார்க்கிறென். நாடக காதலுக்கு எதிரான இந்த படம் நிச்சயம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

இயக்குநர் நடிகர் ரஞ்சித் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி. இங்கு நான் ஒரு நடிகன் ரஞ்சித்தாக நிற்பதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம், அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் என்னை மாமா மாமா என்று அழைப்பதால் தப்பா எடுத்துக்காதீங்க, இது வட்டார வழக்கு, அன்பால் அப்படி அழைக்கிறார்கள். அவர்கள் நினைத்தால்,வேற எந்த நடிகரை வைத்து கூட படத்தை எடுத்திருக்கலாம். ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை வைத்து படம் தயாரித்திருக்கிறார்கள். 100 கோடி ரூபாய்ல எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் படம் தயாரிப்பது பெரிய விசயம் இல்லங்க, தன்னுடைய உழைப்பில், தான் சேர்த்த பணத்தை வைத்து படம் எடுப்பது தான் பெரிய விசயம். அப்படி ஒரு நம்பிக்கை என் மீது வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.  படம் ஓடுது, ஓடல அதுவெல்லாம் அப்பாற்பட்ட விசயம், இருந்தாலும் என்னுடைய குடும்பம் போல அவர்கள் மாறி, மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

அண்ணன் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, எல்லோரும் புதுமுகங்களாக இருக்கிறார்கள், ஊர்ல இருக்கிறவர்களை நடிகர்களாக்கி படம் எடுத்திருக்கிறார்கள், என்று சொன்னார். எனக்கு எந்த நடிகர்களும் நண்பர்கள் கிடையாது, நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்கு என்னிடம் பணம் கிடையாது. ஒரு கதைக்கு தான் நடிகர்கள் என்று என்னை பூவிலங்கு படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திய ஆர்.கே.செல்வவணி சார் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். அவர் வழியில் நானும் கதைக்கான நடிகர்களை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.

இந்த படத்தின் கதை சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து தான் எழுதியிருக்கிறேன். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், இது ஏன்? என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது, அப்படிப்பட்ட நிலையில் தான் இதை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த கதை பற்றி நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன். பத்து வருடங்களாக நானும், என் உதவி இயக்குநர்களும் பேசி வந்தோம். பத்து வருடமாகவா? என்று உங்களுக்கு தோன்றும். ஆனால், இது பத்து வருடங்களாக நடந்துக்கொண்டிருக்கிறது, இனியும் நடக்கும் என்பதால் தான் படம் பண்ண வேண்டும் என்றால், இதை தான் பண்ண வேண்டும், இல்லை என்றால் பண்ண கூடாது என்ற முடிவில் இருந்தேன். இங்கு பேசியவர்கள் இது சாதி படமாக இருக்க கூடாது, என்றார்கள். நிச்சயமாக இது சாதி படமாக இருக்காது, நாடக காதலுக்கு எதிரான படமாக தான் இருக்கும். பெண் பிள்ளைகளை பெற்று நாம் எவ்வளவு அக்கறையோடும், பாசத்தோடும் வளர்க்கிறோம். ஆனால், அந்த பிள்ளைகளுக்கு நடக்க கூடாத விசயம் நடந்தால் எப்படி தாங்க முடியும், அதன் கோபம் தான் இந்த படம்.” என்றார்.

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.