X

100வது டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியராக இருக்க வேண்டும் – புஜாராவுக்கு கவாஸ்கர் வாழ்த்து

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இந்த போட்டி இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகிய இந்தியர்கள் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடியுள்ளார்.

இந்த சிறப்பை நினைவுகூறும் வகையில் புஜாராவுக்கு 100 என்று எழுதப்பட்ட சிறப்பு தொப்பியை அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினார். 100-வது டெஸ்ட் போட்டியில் எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. முதல் இந்தியராக சதம் அடிக்க பிராத்திருக்கிறேன் என கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புஜாராவிற்கு புஜாராவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரோஹன் ஜெட்லி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்திய அணியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பரிசுக்கு வாங்கியதற்கு பிறகு புஜாரா பேசியதாவது:-

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கும். இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், உங்களின் பலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும், மேலும் கடந்த இரண்டு வருடங்களாக எனது ஆட்டத்தில் சில ஷாட்களைச் சேர்த்துள்ளேன், மேலும் கிரிக்கெட் வீரராக தொடர்ந்து வளர்ந்து வருகிறேன்.

நான் அறிமுகமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களை எடுத்திருந்தேன். ஒருவேளை அந்த 72 ரன்கள் நான் எடுக்காமல் இருந்திருந்தால் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். 2024ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் இரண்டாவது இன்னிங்ஸ் சதம் அடித்தேன். துணைக் கண்டத்திற்கு வெளியே நான் அடித்த முதல் சதம். அது என் வாழ்வில் மறக்க முடியாது.

அதேபோல், 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சின்னசாமியில் 92 ரன்களும், 2018-19 தொடரில் அடிலெய்டில் 123 ரன்களும், கபா டெஸ்டில் நான் உடலில் அடிவாங்கி சேர்த்த 56 ரன்களும் என்னால் என்றுமே மறக்க முடியாத தருணங்கள் என்றார்.
புஜாரா இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 57-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 25-ல் தோல்வியும், 17-ல் டிராவும் கண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,900 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 27 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,778 ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்டில் செஞ்சுரி அடிக்க உள்ள புஜாரா இதுவரை ஒரு முறை கூட கேப்டன் பதவியை அலங்கரித்ததில்லை. 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.