Tamilசெய்திகள்

10, 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முதலிடம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தெரிவித்துள்ளதாவது:

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 24 ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 42,519 பேர் எழுதவில்லை. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதி நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதம் 2ந் தேதிமுதல் மறு தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடமும், 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடமும், 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.