Tamilசெய்திகள்

10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ- மாணவிகளும் எழுதினார்கள்.

இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. காலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பிற்பகல் 2 மணியளவில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.