10 லட்சம் பேருக்கு அரசு வேலை – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு

பாரதிய ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் இந்த தடவை தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிட மும் கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது.

ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று டெல்லியில் இறுதி கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இன்று (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி யது. இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், சாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும். இவை தவிர அரசு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

எனவே இதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools