10 ரன்களுக்கு ஆல் அவுட் – டி20 கிரிக்கெட்டில் நடந்த மிக மோசமான சாதனை

சர்வதேச டி20 கிரி்க்கெட் போட்டி வரலாற்றில் குறைந்தபட்ச ரன்களுக்கு ஆட்டமிழந்து சாதனையும், குறைந்தபந்தில் சேசிங் செய்து சாதனையும் இரு அணிகள் படைத்துள்ளன. ஸ்பெயின் மற்றும் ஐசல் ஆப் மேன் ஆகிய இரு நாடுகளின் அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் போட்டியில்தான் இந்த சாதனை நடத்தப்பட்டது.

இதில் ஐசல் ஆப் மே அணி என்பது இங்கிலாந்து அயர்லாந்துக்கு இடையே இருக்கும் ஒரு குட்டி தீவாகும். ஸ்பெயின் நாட்டுக்கு ஐசல் ஆப் மேன் நாட்டு அணி பயணம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஸ்பெயின் அணி 4-0 என்று வென்று இருந்தது. ஒரு போட்டி முடிவு இல்லை.

இந்நிலையில் கார்டாஜெனா நகரில் நேற்று ஐசல் ஆப் மேன் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் 6-வது டி20 ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற ஸ்பெயின் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஐசஎல் ஆப் மேன் அணி 8.4 ஓவர்களில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் ஸ்பெயின் வேகப்பந்துவீச்சாளர் கம்ரான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கம்ரான் தான் வீசிய 3-வது ஓவரில், ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்பெயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அட்லிப் முகமது 4 விக்கெட்டுகளை வீழத்தினார். பர்ன்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐசல் ஆப் மேன் அணியில் அதிகபட்சமாக ஜோஸப் பாரோஸ் 4 ரன்கள் சேர்த்திருந்தார். ஜார்ஜ் பாரோஸ், லூக்வார்ட், ஜேகப் பட்லர் தலா 2 ரன்கள் சேர்த்தனர். மற்ற 7 பேட்ஸ்மேன்களும் ரன் ஏதும்சேர்க்கவில்லை.

11 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஸ்பெயின் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அவாசிஸ் அகமது, ஐசல் ஆப் மேன் அணி வீரர் ஜோஸப் பாரோஸ் வீசிய முதல் ஓவரின் இரு பந்துகளிலும் 2 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.ஆட்டநாயகன் விருது அட்லிப் முகமதுக்கு வழங்கப்பட்டது.

டி20 வரலாற்றில் இதற்கு முன் குறைவான ஸ்கோர் என்பது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையிலான ஆட்டத்தில் சிட்னி அணி 15 ரன்கள் சுருண்டது. ஐசல் ஆப் மேன் அணி ஐசிசியில் கடந்த 2017-ம் ஆண்டு உறுப்பினரானது. 2016, 2018-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools