Tamilசெய்திகள்

10 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கடந்த 6, 7, 8-ந்தேதிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 19-ந்தேதி (இன்று) முதல் பள்ளிக்கூடங்களை திறப்பது என தமிழக அரசு முடிவு எடுத்தது.

அதன்படி இன்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். மே இறுதியில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.