10 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் திரையரங்கங்கள் திறப்பு – முதல் படமாக மாஸ்டர் ரிலீஸ்
கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தியேட்டர்களை கடந்த 5-ந் தேதி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது. தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடந்ததால், உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும், அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்களை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு, தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. நேற்று முதல் – மந்திரி பினராய் விஜயன் நடத்திய பேச்சுவார்த்தையில் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து கேரளாவில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கேளிக்கை வரி ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் கடந்த 10 மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்களின் மின்சார நிலை கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். மீதி தொகையை தவணை முறையில் செலுத்தலாம்.
இதுபோல தியேட்டர்கள் அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய நிலவரியை மாத தவணைகளாக செலுத்தலாம் எனவும் தெரிவித்தது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து நேற்றிரவு கொச்சியில் பிலிம் சேம்பர் நிர்வாகிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தியேட்டர்களை நாளை முதல் திறக்க முடிவு செய்யப்பட்டது.
நாளை முதல் படமாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை திரையிடுவது என்றும் அதன்பின்னர் மலையாள படங்களை திரையிடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தியேட்டர்களை திறக்க முடிவு செய்ததை தொடர்ந்து தியேட்டர்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் உடனே தொடங்கின.