10 மாதங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 வயதான நபர்!
பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுரை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த 10 மாதங்களில் பல்வேறு இடங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே 11 முறை தடுப்பூசியைப் பெற்றதாக பிரம்மாதேவ் கூறுகிறார். தடுப்பூசி போட்டதில் இருந்து முழங்கால் வலி பிரச்சனை குறைந்துள்ளது என்கிறார். அதனால்தான் பல தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டுள்ளார்.
தபால்துறை ஊழியராக நீண்ட காலம் பணியாற்றிய பிரம்மாதேவ், 12 வது முறையை கொரோனா தடுப்பூசி போட சென்றபோது, சுகாதாரத்துறை பணியாளர்களால் அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அவர் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது அம்பலமானது.
தொலைபேசி எண்களை மாற்றி மாற்றிக் கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
தமது அடையாள அட்டையை மாற்றி தடுப்பூசியை பலமுறை போட்டுக் கொள்வது சட்டத்திற்கு எதிரானது என மருத்துவமனை தலைமை மருத்துவர் அமரேந்திர நாராயண் ஷாஹி கூறியுள்ளார். பிரம்மதேவ் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.