10 நாள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 31-ந்தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 4-ந்தேதி அவர் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி நாடுவாழ் இந்தியர்களுடன் (என்.ஆர்.ஐ.) உரையாற்ற உள்ளார்.
அமெரிக்கா பயணத்தின் போது அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாள் பயணமாக அவர் அமெரிக்கா செல்லும் போது வாஷிங்டன் டிசி மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பயண திட்டம் இதுவரை இறுதி செய்யப்படவில்லை எனவும், இந்த வாரத்திற்குள் முழு பயண திட்டமும் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி ஜூலை மாதம் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். அதற்கு முன்பாக ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் லண்டன் சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் பற்றி அவர் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு மண்ணில் அவர் இந்தியாவை இழிவுபடுத்தி விட்டதாக கூறி பா.ஜனதா கட்சி நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு எதிராக போராட்டங்களை நடத்தி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.